×

1.75 டன் ரேஷன் அரிசியுடன் 2 வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி, செப்.27: கர்நாடகாவிற்கு கடத்திய 1.75 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 வேன்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ கிருஷ்ணவேணி மற்றும் போலீசார், நேற்று கிருஷ்ணகிரி – குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் பசவண்ண கோயில் அருகே உள்ள சோதனை சாவடி பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பிக்அப் வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை அளவிலான 24 பைகளில் 1.2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வேனை அரிசியுடன் பறிமுதல் செய்த போலீசார், வேனை ஓட்டிவந்த குருபரப்பள்ளி அடுத்த சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த விஷால் ராஜ்(23) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடலூர் மாவட்டம் பூச்சத்திரம் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடாகாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய, கடத்தி வந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ திபாகர் மற்றும் போலீசார் நேற்று ஓசூர் – தளி சாலையில் உள்ள மதகொண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் பின்புறம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 50 கிலோ மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அவற்றை கர்நாடகாவிற்கு கடத்த இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வேனை ஓட்டி வந்த குருபரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 1.75 டன் ரேஷன் அரிசியுடன் 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Karnataka ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல்?: ஆவின் மறுப்பு